கணவன் தன் உண்மையான வருமானத்தை மறைத்தாலும், அவனது வாழ்க்கை முறையும் அந்தஸ்தும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. ஒரு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி மற்றும் அவர்களது மைனர் மகன் ஆகிய இருவரும் தங்களுக்குத் தனியாகப் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடினர்.

இதனால் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுத்து, குழந்தைக்கு மட்டும் மாதந்தோறும் ₹20,000 வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மனைவி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கஜேந்திர சிங், குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டரீதியாகத் தவறானது என்று கூறி அதை ரத்து செய்தார்.

இந்நிலையில் கணவன் எம்.டெக் மற்றும் எம்பிஏ பட்டதாரி என்றும், ஒரு தனியார் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து மாதம் ₹2.5 லட்சம் சம்பாதிப்பதாகவும் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், கணவனோ தான் வெறும் ₹60,000 மட்டுமே சம்பாதிப்பதாகக் கூறி வருமானத்தை மறைக்க முயன்றார்.

அதோடு இதைக் நிராகரித்த உயர் நீதிமன்றம், கணவனின் கல்வித் தகுதியும் சமூக அந்தஸ்தும் அவர் நல்ல வருமானத்தில் இருப்பதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டது. வருமான ஆதாரங்களை மறைக்க முடியுமே தவிர, ஒருவருடைய சமூக அந்தஸ்தை மறைக்க முடியாது.

அதேபோல் கணவன் தன் குடும்பத்தினரைத் தனது சொந்த வாழ்க்கைத் தரத்திற்கு இணையாகப் பராமரிக்க வேண்டியது சட்டப்பூர்வக் கடமை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனால், மனைவி மற்றும் மகன் இருவருக்கும் தலா ₹30,000 வீதம், ஒட்டுமொத்தமாக மாதந்தோறும் ₹60,000 பராமரிப்புத் தொகையை கணவன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.