அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தது அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி பேசப்பட்டதால்தான் தாங்கள் த.வெ.க-வுக்குச் சென்றதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில்  முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி பேசியதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? வேறு காரணம் இல்லாததால் இப்படிப் பொய் சொல்கிறார்கள். தாங்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்கவும், வழக்குகள் மற்றும் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ளவுமே முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறுகின்றனர்; தொண்டர்கள் என்றும் கட்சி மாறுவதில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னொரு பக்கம், அ.தி.மு.க-வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்திலேயே , டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகள் வெளிப்படையாகவே வலியுறுத்தியுறுதினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசிய கே.சி.கருப்பண்ணன், “யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம், அனைவரும் ஒன்றிணையப் போகிறோம். டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன; ஆனால் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.