த.வெ.க. எம்.எல்.ஏ இளையராஜாவை தி.மு.க-வில் இணைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குதிரை பேரம் நடத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் ஏற்கனவே தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ-வான சரவணன், தன்னையும் தி.மு.க-வில் இணையச் சொல்லி சிலர் பேரம் பேசியதாக ஆடியோக்களை வெளியிட்டு நேற்று புதிய குண்டைப் தூக்கிப் போட்டுள்ளார்.

தன்னை தி.மு.க-வில் சேரக் கூறி ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை தருவதாக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் பேரம் பேசியதாகவும், அதற்கு மறுக்கவே தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சமீபத்தில் தனது கார் மீது லாரியை மோதவிட்டு விபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் எம்.எல்.ஏ சரவணன் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ சரவணனுக்கு தற்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அவரது பாதுகாப்புப் பணிக்காக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் எம்.எல்.ஏ சரவணனுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரப் புகாரைத் தொடர்ந்து த.வெ.க. எம்.எல்.ஏ-வுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.