டெல்லியின் விஐபி பகுதியான ஜந்தர் மந்தரில் “காக்ரோச் ஜனதா கட்சி” சார்பாகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, அங்கிருந்த டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் கால்களில் விழுந்து கெஞ்சும் பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால் போராட்டக் களத்தில் தண்ணீர் தேங்கி, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் உடைமைகள் அனைத்தும் நனைந்து வீணாகியுள்ளன. மழையிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கப் போராட்டக் களத்தில் தற்காலிகக் கூடாரம் அல்லது தார்பாய் அமைக்க அனுமதிக்குமாறு கடந்த மூன்று நாட்களாகப் காவல்துறையிடம் அவர்கள் அனுமதி கோரி காத்துக் கிடக்கின்றனர்.
ஆனால், அதற்குப் போலீசார் அனுமதி மறுத்ததால் அதிர்ச்சியடைந்த அபிஜித் தீப்கே, “சார், ப்ளீஸ் சார்.. மழை பெய்யுது, தார்பாய் போடவாவது அனுமதியுங்க” என்று கைகளைக் கூப்பிக் கெஞ்சியதோடு, போலீஸ் அதிகாரியின் கால்களையும் போய்ப் பிடித்தார்.
அதிகாரிகள் தங்களை இவ்வளவு கொடூரமாக நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இரவெல்லாம் மழையில் நனைந்ததால் மாணவர்கள் தூங்கக் கூட முடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
