இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து, பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மளமளவெனப் பெய்த மழையால் பல மாநிலங்களின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும், இந்தியர்களின் மாற்று யோசனையைப் பயன்படுத்திச் சிலர் தங்களது வேலைகளைத் தடையின்றிச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மும்பையில் பெய்த பெருமழையின்போது நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வெள்ள நீரில் ஓட்டிச் செல்லப் பயன்படுத்திய அசாத்தியமான தொழில்நுட்ப யுத்தி இணையவாசிகளைப் பெருமளவில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகச் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கும்போது, இருசக்கர வாகனங்களின் சைலன்சருக்குள் நீர் புகுந்து வண்டிகள் பாதியிலேயே பழுதாகி நின்றுவிடுவது வழக்கம். இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து தனது ஸ்கூட்டியைக் காப்பாற்ற நினைத்த அந்த மும்பைவாசி, வண்டியின் புகைக்குழாயில் ஒரு சிறிய பிவிசி  பைப்பை மேல்நோக்கி இருக்குமாறு இணைத்துள்ளார்.

சைலன்சர் நீர்மட்டத்திற்கு மேலே இருக்கும்படி பைப் பொருத்தப்பட்டுள்ளதால், இன்ஜினுக்குள் தண்ணீர் புகாமல் அந்த நபர் முழங்கால் அளவு வெள்ளத்திலும் தனது ஸ்கூட்டியை எவ்வித பயமுமின்றி ஜாலியாக ஓட்டிச் செல்கிறார்.

எக்ஸ்  தளத்தில் ‘@Savit12’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு வரும் இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், பாராட்டியும், கமெண்ட் அடித்தும் வைரலாக்கி வருகின்றனர்.