தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, பின்னர் அரசியல் களத்தில் குதித்து இருபெரும் திராவிடக் கட்சிகளின் சவால்களையும் முறியடித்து தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் அண்டை மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. தற்போதைய த.வெ.க கூட்டணி ஆட்சியில் மின்தடை, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட சில விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த போதிலும், பெரும்பாலான மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, திரைத்துறையில் இருந்தபோதே கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அசாத்திய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது தற்போதைய ஆட்சி முறை, அங்குள்ள பிராந்திய ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் விஜய் அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பச்சிளம் குழந்தைகளை அவர் பாசத்தோடு கைகளில் ஏந்தி கொஞ்சிய நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களிலும், அண்டை மாநிலத் தொலைக்காட்சிகளிலும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வீடியோக்களைப் பார்த்து நெகிழ்ந்த கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில நெட்டிசன்கள், “இத்தகைய எளிய மக்கள் தலைவரைப் பெற தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்றும், “எங்கள் மாநிலத்திற்கும் இப்படி ஒரு முதல்வர் தேவை” என்றும் இணையத்தில் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு, அவரது மக்கள் நற்பணிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
