மத்தியப்பிரதேச மாநிலம் தாப்ராவில் ஒரே ஸ்போர்ட்ஸ் பைக்கில் நான்கு இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஓடும் பைக்கின் மீது ஒரு இளைஞர் எழுந்து நின்று கொண்டு, மொபைல் போனில் பேசியபடி பயணிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தாப்ரா பகுதியில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதோடு சாதாரண விதிமீறல்களுக்கே அபராதம் விதிக்கும் போலீசார், இவ்வளவு பரபரப்பான சாலையில் நான்கு பேர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்ததை எப்படி கவனிக்காமல் விட்டனர் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, தாப்ரா நகர காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சய் சர்மா இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தாப்ரா பகுதியில் தான் நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்திய போலீசார், வீடியோவில் இருக்கும் இளைஞர்களை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பைக் ஓட்டுநர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன், அவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
