சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் ‘தொடர் நாயகன்’ விருது வென்ற இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விளையாடிய சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து 5, 0, 1 ரன்கள் என சொதப்பியதே இந்த நீக்கத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அவருக்குப் பதிலாக 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து தொடரிலேயே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான விக்கெட் கீப்பர் இடத்திற்கு பிரப்சிம்ரன் சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “சஞ்சு சாம்சன் உலகக் கோப்பையில் இந்திய அணிக்குச் செய்த பங்களிப்பு அசத்தலானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தற்போதைய ஃபார்ம் மற்றும் முடிவுகள் மிக முக்கியம். அணிக்கு எந்தக் காம்பினேஷன் வெற்றியைத் தேடித்தருமோ அதைத்தான் நாங்கள் தேர்வு செய்வோம்.
இந்திய அணியில் விளையாடுவதற்கான தகுதியை ஒவ்வொரு வீரரும் தங்களது தற்போதைய ஃபார்ம் மூலமே நிரூபிக்க வேண்டும். சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியதற்கான தெளிவான விளக்கம் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். டி20 அணியில் இடம் பறிபோனாலும், சஞ்சு சாம்சனை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஒரு முழுநேர விக்கெட் கீப்பராகப் பயன்படுத்துவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
