தவெக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஊழல் செய்யவும், கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக” என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆட்சி அதிகாரம் பறிபோன நாளில் இருந்தே திமுகவிற்கு துக்கம் தொண்டையை அடைப்பதாகவும், அதன் உச்சகட்டமாக அறிவாலயத்தில் இருக்கும் மரங்கள் கூட அதிர்ச்சியில் அசைவற்று நிற்பதாகவும் தவெக ஐடி விங் சாடியுள்ளது.
தொடர்ந்து அந்தப் பதிவில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான தவெக தலைவரின் தலைமையிலான ஆட்சிக்கு எப்படியாவது கேடு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு, இதுவரை சேராதவர்களுடன் எல்லாம் சேர்ந்து திமுக சதி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். தவெக தலைவரின் கரூர் நிகழ்ச்சிக்கும், மக்கள் சந்திப்புக்கும் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்ததாகவும், பேச்சுரிமைக்கு தடை கேட்டுத் தாண்டிக் குதித்ததாகவும் விமர்சித்துள்ளனர்.
ஊழல் செய்யவும் கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக. அதனால்தான், ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. அதன் உச்சபட்சமாக, அறிவாலயத்தில் இருக்கும் மரங்கள்கூட அதிர்ச்சியில் அசைவற்று…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 7, 2026
ஆனால், திமுக தறிகெட்டு ஆடுவதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வாருங்கள் என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்து அனுப்பியதால், பயந்துபோன திமுக தனது மனுவைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். இறுதியாக, ஜனநாயகத்தின் தீர்ப்பு மன்றமான மக்கள் மன்றம் திமுகவை பின்னங்கால் பிடரியில் பட அரசியல் களத்தை விட்டே ஓட வைக்கப்போவது உறுதி என்றும், தவெக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பிற்கு முன்னால் திமுகவின் சதிகள் மண்ணோடு மண்ணாக வீழும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.
