புணேவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகளான சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் வாட்ஸ்அப் சாட்டிங் மூலம் இந்த விஷயம் தெரியவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்தச் செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத், இன்றைய இளைஞர்களின் டேட்டிங் கலாச்சாரம் மற்றும் போதைப்பொருள் பழக்கம் குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இலக்கு இல்லாத ஈர்ப்பு எப்போதும் அழிவில்தான் முடியும்; நவீன சிந்தனை கொண்டிருங்கள், ஆனால் வாழ்க்கையை ஒழுக்க நெறியோடு வாழுங்கள், இல்லையென்றால் சிறைவாசம், ஏமாற்றம், மனச்சோர்வு போன்ற ஆபத்துகள்தான் மிஞ்சும்” என இளைஞர்களுக்கு கங்கனா அறிவுரை வழங்கியுள்ளார்.

அதே நேரத்தில், இந்த ரகசிய திருமணப் பேச்சுக்கு காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஎஸ்பி சந்தீப்சிங் கில் கூறுகையில், “சியா மற்றும் சேத்தன் திருமணத்திற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை; இந்த வதந்திகள் எங்கிருந்து பரவின என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள நடிகை ஹினா கான், “உண்மையைப் பேசுவது மக்களுக்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? உண்மை முன்பே தெரிந்திருந்தால் கேதனின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்” என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது, டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் இந்த கொலை வழக்கை மிகத்தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
