மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பஞ்ச்பாவ்லி காவல் நிலையத்தில், காணாமல் போன தங்களது மைனர் மகளைத் தேடித் தருமாறு கதறிய குடும்பத்தினரிடம், அங்கிருந்த மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுராவ் ராவத் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “எங்கள் வாகனத்தில் டீசல் இல்லை, உங்களது மகளை எப்படித் தேடுவது? டீசலுக்குப் பணம் கொடுங்கள்” என்று அந்த அதிகாரி அலட்சியமாகப் பேசியது ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இந்த விவகாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, உள்துறைப் பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸின் சொந்த ஊரிலேயே இந்த அவல நிலை என மாநில அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். நாடு முழுக்க இந்தத் துயரச் சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, நாக்பூர் போலீஸ் கமிஷனரகம் உடனடியாகச் செயல்பட்டு இன்ஸ்பெக்டர் பாபுராவ் ராவத்தை அதிரடியாகக் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) மாற்றி உத்தரவிட்டுள்ளதுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே உத்தரவிட்டுள்ளார்!