சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் “கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்” என்று விமர்சித்திருந்த விவகாரம், தற்போது இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீதிபதியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடியாக, 30 வயது இளைஞரான அபிஜீத் திப்கே என்பவர் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற புதிய தளத்தைத் தொடங்கி ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிர வைத்துள்ளார்.
கடந்த 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகப் பணியாற்றிய அபிஜீத் தொடங்கிய இவ்வியக்கம், வெறும் நான்கே நாட்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும் (Followers), 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று இணையத்தில் ஒரு பெரும் அலையை உருவாக்கியுள்ளது. இந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு’ எதிர்க்கட்சியாக ‘தேசிய ஒட்டுண்ணி முன்னணி’ என்ற மற்றொரு தளமும் தொடங்கப்பட்டு நெட்டிசன்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி வருகிறது!
