வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துவதாகவும், அதே சமயத்தில் அமைதி வளர்ச்சிக்காக பா.ஜ.க அஷ்டலட்சுமி வடிவங்களாகக கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி பேசியதாவது,  நாகாலாந்தில் பா.ஜ.க, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. வட கிழக்கில் சூழ்நிலைகள் மாறும் என 10 வருடங்களுக்கு முன் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் ஆட்சியின்போது நாகாலாந்தில் அரசியல் ஸ்திரமின்மை இருந்ததை குறிப்பிட்ட அவர், தில்லியிலிருந்து வட கிழக்கு பகுதியை ரிமோட் வாயிலாக கட்டுப்படுத்தியதாகவும் அதன் வளர்ச்சிக்கான பணத்தை பறித்ததாகவும் கூறினார். அதே சமயத்தில் தில்லி முதல் திமாபூர் வரை வம்ச அரசியலுக்கு முன்னுரிமை அளித்தாகவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) நாகாலாந்தை இயக்குவதற்கு அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார்.