சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அவரது அறையில் நடத்திய சோதனையில் பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறையிலிருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, சுகேஷ் எப்போதும் மிக விலையுயர்ந்த பொருள்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஆடம்பர விலைஉயர்ந்த பொருள்கள் கூட அவரை பலமுறை பல சிக்கல்களில் இருந்து விடுவிக்க உதவி இருக்கிறது. தன் கையிலிருக்கும் பணப் புழக்கத்தை கொண்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இந்த பொருள்களை அவர் கைவசம் வைத்திருக்கலாம். அவர் சிறையில் எவ்வளவு வசதியாக இருந்தார் என்பது இந்த சோதனையில் தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக சுகேஷ் மிக இயல்பாக சிறைச்சாலையில் இருந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.