ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 15-ம் தேதி  எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜூனைத் என்பது தெரிய வந்தது. இவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கடத்தி வந்து காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையின் போது பஜ்ரங் தள் கட்சியைச் சேர்ந்த லோகேஷ், ரின்கு ஷைனி, ஸ்ரீகாந்த் மற்றும் மோனு‌ மனேசர் ஆகியோருக்கும் உயிரிழந்த இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் அவர்கள் தான் காரில் கடத்தி வந்து தீ வைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இவர்களிடம் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த ஜூனைத் மற்றும் நசீர் ஆகிய இருவரும் இறைச்சிக்காக மாடுகளை அனுப்பும் தொழில்களை செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பசு பாதுகாவலர் குழுக்கள் அவர்கள் இருவரையும் காரில் கடந்து வந்து எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் மற்றும் ஹரியானா போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.