தாய்லாந்தில் மளிகைக் கடை ஒன்றிற்குள் ஒய்யாரமாக நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த தின்பண்டங்களைச் சுவைத்துவிட்டு அமைதியாக வெளியேறிய வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அருகிலுள்ள தேசியப் பூங்காவிலிருந்து வழிதவறி வந்த இந்த யானை, ஏதோ பழகிய வாடிக்கையாளரைப் போலக் கடைக்குள் புகுந்து தனது தும்பிக்கையாலேயே இனிப்பு அரிசி மிட்டாய்கள், வாழைப்பழங்கள் மற்றும் சாண்ட்விச் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து ருசி பார்த்துள்ளது.

கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடாமல், இந்த விசித்திரமான “ஷாப்பிங்” அனுபவத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 25 டாலர் மதிப்புள்ள தின்பண்டங்களைச் சாப்பிட்டுவிட்டு, எந்தச் சேதமும் விளைவிக்காமல் அந்த “சாந்தமான ராட்சதன்” வெளியேறியதுதான் ஹைலைட்.

“>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று உரிய இழப்பீட்டை வழங்கியது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இந்த யானை, அவ்வப்போது மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களைத் தேடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இதை எப்படி விளக்குவது?” என்றும், “லிஸ்ட் இல்லாமலேயே கரெக்டான தின்பண்டங்களைத் தேர்வு செய்கிறதே!” என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர். நகைச்சுவையாகத் தெரிந்தாலும், வனப்பகுதிகள் சுருங்கி வருவதால் உணவைத் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழையும் கசப்பான உண்மையையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.