தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தடையை மீறி விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக நாகலாந்து மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள். அதோடு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனிப்படை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு ஒரு கும்பல் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆதிஷ் கண்ணன், சதீஷ்குமார், பிரதீப், வினோத் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து நம்பர் லாட்டரி சீட்டுகள், 9 செல்போன்கள், 5 லேப்டாப்புகள், ஒரு கார் மற்றும் ரூ.1,61,000 ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட டாபர் பிரபு என்பவரை தற்போது போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.