தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (டிசம்பர் 26) முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று ஒரு கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹12,890-க்கும், ஒரு சவரன் ₹560 உயர்ந்து ₹1,03,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்திற்குப் போட்டியாக வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹9 உயர்ந்து ₹254-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் ₹9,000 உயர்ந்து ₹2,54,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே ஒரே நாளில் தாறுமாறாக விலை உயர்ந்திருப்பது, இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பட்ஜெட்டைப் பதம் பார்த்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்த அதிரடி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
