2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு அக்கட்சியின் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என்றும், திமுக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்து, அதற்காகப் பணம் செலுத்திய நிர்வாகிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். குறிப்பாக, வேட்பாளர் விருப்ப மனுவுக்காக 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்தப் பணம் அனைத்தும் ‘கட்சி வளர்ச்சி நிதிக்கு’ மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதால், “சீட்டும் இல்லை, கொடுத்த காசும் இல்லை” என்ற நிலையில் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கமல்ஹாசனின் இந்த திடீர் அரசியல் நகர்வு மற்றும் நிதி தொடர்பான விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
