வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி, காங்கேயநல்லூர் சாலையில் உள்ள அவ்வையார் தெருவில், பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், அவ்வையார் தெருவில் உள்ள கற்பக விநாயகர் கோவில் எதிரே பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அப்பகுதியில் முறையான மற்றும் சீரான வடிகால் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தால், தேங்கிய மழைநீரானது ஞாயிற்றுக்கிழமையும் வடியாமல் அப்படியே காணப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் பள்ளிச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, நடந்து செல்லும் பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த அசுத்தமான தண்ணீருக்குள்ளேயே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

​இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடும் வேதனையுடன் கூறுகையில், அவ்வையார் தெருவில் லேசான சிறு மழை பெய்தாலும் கூட, தண்ணீர் வடிய வழியில்லாமல் ஒட்டுமொத்த சாலையும் குளம் போல் மாறிவிடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மோசமான வடிகால் பிரச்சினை தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு தற்காலிக அல்லது நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் அன்றாட சிரமங்களையும், அசுத்த நீரால் பரவக்கூடிய தொற்றுநோய் போன்ற சுகாதாரக் கேடுகளையும் கருத்தில் கொண்டு, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அவ்வையார் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.