டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இத்தோல்வி குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், இந்திய அணியின் பலவீனங்களைச் சாடியுள்ளார்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி திணறியது. லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நமீபியா ஆகிய அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணிக்கு, இந்தப் போட்டி ஒரு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவின் இந்தத் தோல்வி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக இலக்கை விரட்டிய (Chase) போதே இந்திய அணியின் பலவீனம் அம்பலமாகியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எப்படி விளையாடுவார்கள் என்பதை இந்திய அணி தற்போது மறந்துவிட்டது. அவர்களின் அனுபவம் எவ்வளவு பெரியது என்பது தற்போது களத்தில் உணரப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by cricket trending video (@crixo_oxo)

மேலும் இந்திய அணியின் உத்தி குறித்து விமர்சித்த அமீர், “இந்தியா மட்டுமல்லாது மற்ற அணிகளும் ஒரு மிகப்பெரிய தவறைச் செய்கின்றன. அனைத்து இடதுகை பேட்டர்களையும் வரிசையாக களமிறக்குகின்றனர். அவர்களுக்கு எதிராக எதிரணிகள் ஆஃப் ஸ்பின்னர்களை மிக எளிதாகப் பயன்படுத்தி விக்கெட்டுகளைச் சரித்து விடுகின்றனர். தொடக்கத்திலேயே 2 அல்லது 3 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், 180 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது தலைவலியாக மாறிவிடும்,” என்று தெரிவித்துள்ளார்.

பலமான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, இடது மற்றும் வலது கை பேட்டிங் ஜோடியைப் பராமரிக்கத் தவறியதே இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இத்தோல்வி இந்திய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.