தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய வீரர்கள் கர்வத்தை விட்டுவிட்டு, எதிரணியினரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இது குறித்து ‘ஜியோ ஸ்டார்’ தளத்தில் கவாஸ்கர் பேசியதாவது, இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை கவனித்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. களமிறங்கியது முதலே ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு தூக்க வேண்டும் என்ற முனைப்பில் மட்டையை சுழற்றினார்கள். டி20 கிரிக்கெட் விளையாடும் முறை இதுவல்ல.”
ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தபோதிலும், தென்னாப்பிரிக்க வீரர்களான டெவால்ட் பிரெவிஸ் (45), டேவிட் மில்லர் (63) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (44*) ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
“எதிரணி ஒரு கடினமான ஆடுகளத்தில் எப்படி ரன் சேர்த்தது என்பதை இந்திய வீரர்கள் கவனிக்க வேண்டும். முதலில் உங்கள் கர்வத்தை (Ego) ஓரங்கட்டிவிட்டு, சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். பிரெவிஸ் மற்றும் மில்லர் அமைத்த அந்த பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவிற்கும் தேவைப்பட்டது. ஆனால் இந்திய பேட்டர்களோ மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் (Overconfidence) விளையாடி விக்கெட்டுகளை வாரி வழங்கினர்,” என கவாஸ்கர் சாடினார்.
இந்திய அணியில் ஷிவம் துபே (42 ரன்கள்) தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சூப்பர்-8 சுற்றில் இந்தியா இன்னும் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி கனவை தக்கவைத்துக் கொள்ள, மீதமுள்ள இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வந்து அடுத்தப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
