“விளையாட்டுத் திறமை ஒரு வீரருக்குப் புகழைக் தேடித்தரலாம்; ஆனால், அவனது நற்பண்புகளே அவனைச் சாதனையாளனாக மாற்றும்” என்ற விளையாட்டு உலகின் தாரக மந்திரத்தை அண்மைக்காலச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டியுள்ளன. இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா ‘ஏ’ – இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ‘சூப்பர் ஓவர்’ முடிவில் இந்திய அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தள்ளுமுள்ளுவில் இறங்கியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் இவரது ஆக்ரோஷமான நடத்தை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு மைதான வன்முறையில் அவர் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நடுவர்களின் தீர்ப்புகளால் இரு அணி வீரர்களுக்கும் இடையே பதற்றம் நிலவியதும், தோல்வியின் ஏமாற்றத்தில் இருந்த வைபவ்வை இலங்கை வீரர்கள் சீண்டியதும் இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

 

இருப்பினும், சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த எதிர்கால நம்பிக்கையாகக் கருதப்படும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்களுக்கு, ரன் குவிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதாகும். இன்றைய சமூக ஊடகக் காலகட்டத்தில், ஒரு வீரரின் சாதனைச் சதங்களை விட, மைதானத்தில் அவர் காட்டும் 10 விநாடி ஆக்ரோஷ வீடியோக்களே அவரது பிம்பத்தைத் தீர்மானிக்கின்றன.

எதிரணியினர் வம்பிழுக்கும்போது வார்த்தைகளாலோ அல்லது கைகளாலோ பதில் சொல்வதை விடுத்து, பேட்டினால் மட்டுமே பதிலடி கொடுப்பதே சிறந்த வீரருக்கு அழகு என்பதை இளம் வீரர்கள் உணர வேண்டும். திறமை உங்களை சர்வதேசக் கிரிக்கெட்டின் கதவு வரை கொண்டு சேர்க்கலாம்; ஆனால், ஒழுக்கமும், நிதானமும் மட்டுமே உங்களை நீண்ட காலம் அங்கே நிலைத்திருக்கச் செய்யும். எனவே, இந்தியக் கிரிக்கெட்டிற்குத் தேவை வைபவ்வின் ஆத்திரமல்ல, அவரது அதிரடி பேட்டிங் மட்டுமே என்பதை உணர்ந்து, இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாகக் கொண்டு அவர் சிறந்த சாதனையாளராக உருவெடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.