கர்நாடக மாநிலம் தர்வாடி அருகே உள்ள அமினபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா. இவரது மனைவி கமலா. ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பத்தை நடத்திக்கொண்ட ஈரப்பா, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதனால் குடும்ப செலவுக்காக கமலா அருகிலுள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.

இந்த வேலை வாயிலாக கமலா, சபாப்பா என்ற இளைஞருடன் பழகி வந்தார். இந்த நட்பு, பின்னர் திருமணத்தை மீறிய தொடர்பாக மாறி கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் உறவில் இருந்தனர். ஈரப்பா மீது வன்மம் கொண்ட கமலா, தனது காதலனிடம் “என் கணவனை கொலை பண்ணு, ரொம்பக் கொடுமைப்படுத்துறான்” எனக் கூறியுள்ளார். இதனை ஆரம்பத்தில் மறுத்த சபாப்பா, பின்னர் கமலாவின் அழுத்தத்தினால் ஈரப்பாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, தனது நண்பருடன் சேர்ந்து, ஈரப்பாவை டாஸ்மாக் கடையில் மது குடிக்க அழைத்துச் சென்று, பின்னர் இருசக்கர வாகனத்தில் அவரை பெலகா பகுதியில் உள்ள பாலத்திற்கு அருகே அழைத்துச் சென்றனர்.

அங்கு, கட்டைகள் மற்றும் கற்களை கொண்டு ஈரப்பாவை சரமாரியாக தாக்கி, கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் மறுநாள் காலை தெரிந்ததில், பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த கமலாவை கைது செய்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கள்ளக்காதலன் சபாப்பா மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.