பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் நிதி உதவி கோரி நிற்பது நாட்டின் சுயமரியாதைக்குப் பெரும் சுமையாக உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

அதாவது தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: “பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது ஓரளவிற்கு அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால், அதில் பெரும் பகுதி நமது நட்பு நாடுகளிடமிருந்தும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் கடனாகப் பெறப்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நிதிக்காக நானும், ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்பதை பெரும் அவமானமாகக் கருதுகிறோம். ஒருவரிடம் கடன் வாங்கச் செல்லும் போது, நாம் அவர்கள் முன்னால் தலைகுனிந்து நிற்க வேண்டியுள்ளது. இது நமது சுயமரியாதையைச் சிதைக்கும் செயலாக இருக்கிறது.

கடனுக்காக மற்ற நாடுகள் வைக்கும் நிபந்தனைகளை எங்களால் மறுக்க முடிவதில்லை. அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழலை எண்ணி வெட்கத்தால் எங்களது தலைகள் குனிகின்றன,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டையும், வரலாறு காணாத விலைவாசி உயர்வையும் சந்தித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சவுதி அரேபியா, சீனா போன்ற நாடுகளின் உதவியையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தைத் தற்சார்பு அடையச் செய்ய முடியும் எனத் தொழில் அதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.