மிர்சாபூர் பகுதியில் நாய் கடித்த சிறுவன் ஒருவன், நாய் போலவே குறைப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்தச் சிறுவனுக்கு ‘ரேபிஸ்’ (Rabies) நோய் பாதிப்பு இல்லை என்பதும், அது ஒரு வகையான மனநல பாதிப்பு என்பதும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிர்சாபூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கரண், கடந்த நவம்பர் மாதம் வாரணாசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றபோது நாய் கடித்தது. அப்போது அவனுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், பயத்தின் காரணமாகத் தொடர் தடுப்பூசிகளை அவன் முழுமையாகப் போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் 14-ஆம் தேதி அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டு, திடீரென நாய் போல குரைக்கவும், விசித்திரமாக நடந்து கொள்ளவும் தொடங்கினான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
The Barking Boy of Mirzapur DOES NOT have rabies.
Medical evaluation by BHU and Dr. Shefali Batra confirms it is Dissociative Conversion Disorder (ICD F44), a psychiatric response to trauma.Stop sharing misinformation.
Humans do not bark when they have rabies.
Support mental… pic.twitter.com/hXE7jc8gzK— j.a.h.n.a.v.i._.i.y.e.r (@JahnaviIyer) March 23, 2026
சிறுவனை வாரணாசி பி.எச்.யு (BHU) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்குள்ள நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர் ஷெபாலி பத்ரா ஆகியோர் தீவிரப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், சிறுவனுக்கு இருப்பது ‘டிசோசியேட்டிவ் கன்வர்ஷன் டிசார்டர்’ (Dissociative Conversion Disorder – ICD F44) என்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் நாய் போல குரைக்க மாட்டார்கள். நாய் கடித்த பயம் மற்றும் மன ரீதியான அதிர்ச்சியின் காரணமாகவே அந்தச் சிறுவன் அவ்வாறு நடந்து கொண்டான். தற்போது உரிய சிகிச்சைக்குப் பிறகு அவன் குணமடைந்து வருகிறான்” எனத் தெரிவித்தனர்.
சிறுவனின் தந்தை கூறுகையில், “எனது மகனுக்கு நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்ட ஊசிக்குப் பிறகு தற்போது உடல்நிலை தேறி வருகிறது. இப்போது அவனிடம் நாய் போல குரைக்கும் பழக்கம் ஏதுமில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ரேபிஸ் குறித்த தவறான தகவல்கள் மக்களிடையே பரவி வருவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. உடல் ரீதியான பாதிப்புகள் சில நேரங்களில் மனநலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
