அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) எனப்படும் அபாயகரமான போதைப்பொருள் இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம் சண்டிகரில் பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஏஜென்ட் ஒருவர், சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக எந்த ஒரு அசைவும் இன்றி சிலையைப் போல நின்றுகொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்ப்பதற்கு உயிருள்ள மனிதர் போலத் தெரிந்தாலும், அவர் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அப்படியே உறைந்து போய் நின்ற விதம் அங்கிருந்தவர்களைப் பதறவைத்துள்ளது.
View this post on Instagram
பொதுவாக ‘சைலாசின்’ (Xylazine) எனப்படும் இந்த போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள், தங்களது சுயநினைவை இழந்து, உடல் அசைவற்ற நிலையில் நீண்ட நேரம் ஜாம்பிக்களைப் போல நிற்பார்கள்.
கால்நடைகளுக்கு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்தை மனிதர்கள் உட்கொள்ளும்போது, அது மூளையின் செயல்பாட்டை மந்தமாக்கி, ஒருவரை உயிரற்ற நிலைக்குத் தள்ளுகிறது.
சண்டிகரில் நடந்த இந்தச் சம்பவம், இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப் பழக்கத்தையும், அதன் விபரீதங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
