மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் மருந்துத் தேவையில் பெரும் பகுதியை இமாச்சல பிரதேசம் பூர்த்தி செய்து வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களின் விலை 200% முதல் 300% வரை அதிகரித்துள்ளதாக இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத் (HDMA) தலைவர் ராஜேஷ் குப்தா கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால் தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருளின் விலை, கிலோவுக்கு ரூ.250-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசப் பாதிப்புகளுக்காக மக்கள் தினசரி பயன்படுத்தும் ஜெனரிக் மருந்துகளின் விலையும் உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் மட்டுமல்லாமல், மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கரைப்பான்கள் (Solvents) மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடும் இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் மருந்து உற்பத்தியைத் தொடர்வது கடினம் என உற்பத்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் நெருக்கடியைத் தவிர்க்கவும், பொது சுகாதாரத் துறை முடங்காமல் இருக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.