சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ (Views) மற்றும் ‘லைக்ஸ்’ பெறுவதற்காகத் தங்களின் உயிரையே பணையம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களின் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சீறிச் சென்ற பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடிய இளைஞர் ஒருவருக்கு, அந்தப் பாம்பு மரண பயத்தைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பாம்பின் பின்னால் இளைஞர் ஒருவர் ஓடுகிறார். திடீரென அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து அவர் தூக்க முயல, ஆக்ரோஷமடைந்த அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் திரும்பி அந்த இளைஞரின் நெஞ்சின் மீது ஏறி படமெடுத்து நின்றது. பாம்பின் இந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
View this post on Instagram
பாம்பு எச்சரித்த பின்பும் அந்த இளைஞர் அடங்காமல், மீண்டும் அதன் பின்னால் ஓடிச் சென்று அதன் வாலைப் பிடித்துள்ளார். இம்முறை அந்தப் பாம்பு அவரது முகத்தை நோக்கியே சீறிப் பாய்ந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த இளைஞர் தரையில் விழுந்து தப்பியோடினார். நூலிழையில் உயிர் தப்பிய போதிலும், அந்த இளைஞரின் பொறுப்பற்ற செயல் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக பைக் ஸ்டண்ட், ஓடும் ரயிலில் சாகசம் மற்றும் வனவிலங்குகளைத் துன்புறுத்துவது போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். “இத்தகைய ஆபத்தான வீடியோக்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவே, இளைஞர்களை மேலும் இத்தகைய விபரீதங்களில் தள்ளுகிறது” என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும், பொதுமக்களுக்கு அச்சம் விளைவிப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
