திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் திமுக அமைச்சர் இ.பெரியசாமியின் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.16) காலை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், திமுகவில் மாநில துணை பொதுச்செயலாளராகவும் உள்ள இ.பெரியசாமி, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது இல்லத்திற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டியதுள்ளதாக கூறி சோதனையை துவக்கியுள்ளனர். சோதனைச் சமயத்தில், வீட்டில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி இருந்தனர்.
அமைச்சரின் மகன் செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் சீலப்பாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல், அமைச்சர் பெரியசாமியின் மகளான இந்திரா, தனது கணவர் துவாரகநாதன் மற்றும் குழந்தைகளுடன் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். அவர்களது இல்லத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பேசினார். அவர் கூறியதாவது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக திமுகவினரை மத்திய பாஜக அரசு அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தையும் கையில் எடுத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
திமுக அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தி பயமுறுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகள், அரசியல் எதிரிகள் மீது தாக்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. எந்தவிதமான பயமுறுத்தலாலும் திமுகவினரை தடுக்க முடியாது,” என்றார்.
