பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

அண்மையில், தேர்தல் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகளைத் தாம் மட்டுமே முடிவெடுப்பதாக ராமதாஸ் தெரிவித்திருந்ததையடுத்து, தந்தை-மகன் இடையே நிலவும் கருத்து வேறுபாடு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பமும், குழப்பநிலை பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

தற்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனியான அணிகளை அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அன்புமணி தனது தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை நடத்து, மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், ராமதாஸ் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சவுமியா, மூன்று மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு, அவரது தாயார் சரஸ்வதி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார். இதில் ராமதாஸும் பங்கேற்றது, கட்சியின் உள்நிலை அரசியலில் முக்கிய புரட்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில், பாமகவின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாண்டிச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர். இது முற்றிலும் உண்மையல்ல. பொதுக்குழு எந்தவித மாற்றமும் இன்றி நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,” என அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.