தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ‘ஆட்சியில் பங்கு’ மற்றும் ‘தொகுதிப் பங்கீடு’ விவகாரத்தில் மோதல் போக்கு வலுத்து வருகிறது. கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், வரவிருக்கும் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டு, 160-ல் வெற்றி பெறும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த 2021 தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133-ல் வெற்றி பெற்றீர்கள். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வியடைந்த இடங்களைத் தான். அதிகாரப் பகிர்வு என்பது அவசியம்; ஆட்சியில் பங்கு என்பது எங்கள் உரிமை. மக்கள் அதைத் தீர்மானிப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் இம்முறை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை முதல்வர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் தற்போது சீட்டு கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். எனவே நாளை முதல் இனி யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேச மாட்டார்கள்.

இந்த நிலைப்பாட்டை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே அல்லது செல்வப்பெருந்தகை போன்ற தலைவர்கள் கேள்வி எழுப்பினால் பதில் சொல்லலாம். தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல முடியாது.

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் (ரூ. 5,000 வழங்கியது) மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அரசியல் கட்சிகள் விரைவில் உணர்வார்கள்.

தேர்தல் நெருங்கும் வேளையில், தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வெவ்வேறு துருவங்களாகத் தெரிவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.