தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான குஷ்பு ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவதூறு பரப்பிய குற்றத்திற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 20,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு மாத காலம் கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
