திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். அவர் பேசுகையில், “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று சோழிங்கநல்லூரிலும், இன்று திருச்செங்கோட்டிலும் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒருவருக்கே உரிய அதிகாரம். இது தொடர்பாக ஊடகங்கள் எந்தவிதமான ஊக செய்திகளையும் வெளியிட வேண்டாம்” என கேட்டுக்கொண்டார். மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் குறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், “மற்ற கட்சிகள் ரூ.200, ரூ.300 வழங்கி கூட்டம் திரட்டும் நிலை உள்ளது. ஆனால் விஜய் வருகிறார் என்றாலே மக்கள் தானாகவே கூடுகிறார்கள். இதுவே தவெகவின் பலம்” என்றார்.

ஈரோட்டில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள தவெக கூட்டம் குறித்து அவர் கூறுகையில்,
“அன்றைய கூட்டத்தில் செங்கோட்டையன் சிறப்பாக பேசுவார். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்காக அனைவரும் முழுமையாக உழைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “தலைவர் விஜய் தனது உச்சநிலையை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளார். விரைவில் தவெகவுக்கு சிறந்த தேர்தல் சின்னம் வழங்கப்படும். அந்த சின்னம் அறிவிக்கப்பட்ட 15 நிமிடங்களில் உலக அளவில் கவனம் பெறும்” என்றார்.