சண்டிகரில் 11 வகுப்பு மாணவி ஒருவர் ஓடும் இருசக்கர வாகனத்தில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவி முன்பதிவு செய்த வாகனத்திற்குப் பதிலாக வேறொரு வாகனம் வந்துள்ளதுடன், அதில் ஓட்டுநராக இருந்த ஷாநவாஸ் என்கிற ஷானு என்பவர், வாகனத்தை ஒரு கையால் ஓட்டிக்கொண்டே பின்னால் அமர்ந்திருந்த மாணவியைத் தவறான நோக்குடன் தொட்டுத் தொட்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
மாணவி இதனை எதிர்த்தபோதும், ஓட்டுநர் மிரட்டிவிட்டு வாகனத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார். நீண்ட தூரம் அழைத்துச் சென்ற நிலையில், மாணவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், வாகனத்தின் சமநிலை தவறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்த பிறகு, ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இந்தப் பாலியல் சீண்டலின் போது, மாணவி தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். மாணவியின் புகாரை அடுத்து மணிமாஜ்ரா பகுதியிலிருந்து தலைமறைவாக இருந்த அந்த இருசக்கர வாகன வாடகை ஓட்டுநரை காவல் துறையினர் பின்னர் கைது செய்தனர்.
