பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் மாநில அமைச்சர் நிதின் நபினை நியமித்து, கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த நியமனம் கட்சியின் நாடாளுமன்ற வாரியத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் அரசின் அமைச்சர் திரு. நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிதின் நபின் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசில் சாலை கட்டுமானத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். பாஜக தனது உயர்மட்ட தலைமைத்துவ அமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஜனவரி 2020-ல் பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா, தனது அசல் பதவிக் காலத்தை ஏற்கனவே நிறைவு செய்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்டங்களை முன்னிட்டு, அவருக்கு பலமுறை பதவிக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த நிதின் நபின், பாஜகவின் அனுபவமிக்க மற்றும் செல்வாக்கு கொண்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பாட்னாவில் பிறந்த இவர், பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் தீவிர தேர்தல் அரசியலில் கால்பதித்தார்.
பாட்னாவின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிதின் நபின், 2006 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், பங்கிபூர் தொகுதியில் இருந்து 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது அரசியல் வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
