மூன்று வருடங்களாகக் காதலித்து வந்த காதலிக்கு, அவளது ஆசைப்படி ₹2.5 லட்சம் மதிப்புள்ள உயர்தர கேமிங் கணினியைப் பரிசாக வழங்கிய அடுத்த நாளே, அவள் காதலனைப் பிரிந்து சென்ற அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், தனது காதலி பல நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், பெரும் தொகையைச் செலவழித்து அந்த அதிநவீன கணினியை வாங்கித் தந்துள்ளார். ஆனால், அந்த விலைமதிப்பற்ற பரிசைப் பெற்றுக்கொண்ட அடுத்த நாளே, அந்தப் பெண் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி காதலை முறித்துக் கொள்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், அவள் ஒரு பண ஆசை பிடித்த பெண் என்பதைப் புரிந்து கொண்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தற்போது அந்தப் பெண்ணால் ஏமாற்றப்பட்ட காதலன், தனக்கு நேர்ந்த இந்தத் துரோகத்திற்குப் பழிவாங்க விரும்புவதாகவும், அதற்கு நெட்டிசன்களிடம் ஐடியா மற்றும் உதவிகளைக் கேட்டு சமூக வலைத்தளமான ரெடிட்டில் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “அவள் எனது காதலைப் பயன்படுத்திக் கொண்டு இந்த கணினியைப் பறிக்கவே என்னுடன் பழகியுள்ளார். தற்போது அவளுக்குப் பாடம் புகட்ட நான் என்ன செய்ய வேண்டும்? சட்டப்பூர்வமாக அந்த கணினியைத் திரும்பப் பெற முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, “இனி அவளைப் பற்றி யோசிக்காமல் நகர்ந்து போவதே நல்லது” என்றும், சிலர் “அவள் மீது ஏமாற்றுப் புகாரின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்றும் தங்களது கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
