தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்க இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், அவரது அரசியல் வெற்றியைப் போலவே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாகப் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப் படத்திற்கு, தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களால் ரிலீஸ் சிக்கல்கள் நீங்கியுள்ளன.
இதனால், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தோடு படத்தையும் ரிலீஸ் செய்து நல்ல வசூல் பார்த்துவிடலாம் எனத் தயாரிப்பு தரப்பும், படத்தை வாங்கியுள்ள ஓடிடி நிறுவனமும் துடியாய் துடித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் விஜய்.
தற்போதுள்ள அரசியல் பரபரப்பான சூழலில், சினிமா ரிலீஸ் பற்றி யாரும் பேச வேண்டாம் எனத் தயாரிப்பாளரிடம் விஜய் கறாராகத் தெரிவித்துவிட்டாராம். தான் முதலமைச்சராகப் பதவியேற்று, மக்கள் நலத்திட்டங்களில் கையெழுத்திட்ட பிறகு, நிதானமாக இன்னும் நான்கு வாரங்கள் கழித்தே ‘ஜனநாயகன்’ திரைக்கு வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இடையில் மே 14-ம் தேதி சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், விஜய்யின் இந்தத் திடீர் தள்ளிவைப்பு முடிவால் சினிமா வட்டாரமே திகைப்பில் உள்ளது.
அரசியல் ஆரவாரங்களுக்கு மத்தியில், மக்கள் பணிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற விஜய்யின் இந்த ஸ்டாண்ட் அவரது ஆதரவாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
