தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். எனினும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், விஜய்யின் கட்சிக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தன.
இந்தச் சூழலில், 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, தவெக-விற்கு நிபந்தனையுடன் ஆதரவை வழங்க முன்வந்தது. இதன் மூலம் தவெக-வின் பலம் 113-ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகப் பொறுப்பு ஆளுநரைச் சந்தித்த விஜய், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
வழக்கமாக 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் இருந்தால்தான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். ஆனால், தவெக தனிப்பெரும் கட்சியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். நாளை காலை 11.30 மணியளவில் விஜய் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
ஆயினும், பதவியேற்ற 48 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி, 118 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார். தற்போது கைவசம் 113 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க இன்னும் 5 அல்லது 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு விஜய்க்குத் தேவைப்படுகிறது. பிற கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் அல்லது சுயேச்சைகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், தமிழக அரசியலில் குதிரை பேரம் உள்ளிட்ட நகர்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நடிகராக இருந்து அரசியலில் கால் பதித்த விஜய், தனது முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.
