மதுரை மாவட்டத்திலுள்ள தொட்டப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்த நவீன் சந்துரு என்பவர் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் கண்காணிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நவீன் சந்துரு ராமேஸ்வரத்தில் வாடகை வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் கோவில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சந்துரு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்துருவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த சந்துருவின் மனைவி லாவண்யாவும், பெற்றோரும் சந்துருவின் சாவுக்கு அதிகாரிகள் தான் காரணம் எனக்கூறி ராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், துணை சூப்பிரண்டு உமாதேவி, கோவில் இணை ஆணையர் சிவராமகுமார் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து இணை ஆணையர் சிவராமகுமார் கூறியதாவது, போலீசாரின் விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கோவில் பணியாளரின் மனைவிக்கு கோவிலில் அரசு வேலை கிடைக்க இந்து சமய அறநிலைத்துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பிறகு சக பணியாளர்களும், சந்துருவின் குடும்பத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேலைக்கு சேர்ந்து 7 மாதமே ஆன நிலையில் சந்துரு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.