நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நடைபாதையில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததால் பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்துக் கொண்டு தாவரவியல் பூங்கா உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

நேற்று முன்தினம் ஊட்டி தாவரவியல் பூங்கா டோங்கா சாலையில் ஆணையாளர் ஏசுராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் 12 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி உள்ளனர். அப்போது நகராட்சி ஊழியர்களுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.