இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நவரத்தினம் முதல் விவசாயப் பொருட்கள் வரை, குறைந்த வரி விகிதத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டம்.
ஆனால் தற்போது இந்தியாவுக்கு வரும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு குறைந்த வரிதான் விதிக்கப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
விவசாயத்தில் இந்தியா தளர்க்க மாட்டோம்:
விவசாயம் தொடர்பான பொருட்களில் எந்தவித சமரசத்தையும் இந்தியா மறுத்துவிட்டது. காரணம், இந்திய விவசாயத்தில் பெரும்பாலானவர்கள் சிறு நிலக்கரைகளில் வாழும் விவசாயிகள். அமெரிக்கா போன்ற பண்ணை விவசாய முறை இந்தியாவில் இல்லை. எனவே, அமெரிக்கா விவசாயப் பொருட்களை வரிவிலக்குடன் இறக்குமதி செய்தால், இந்திய விவசாயிகள் வாழ முடியாமல் போவார்கள். இதனால் இந்தியா கவனமாகவே செயல்படுகிறது.
இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது. கூடவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் மேலும் வரி விதிப்போம் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது.
இருந்தபோதும், இந்தியா தனது நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்காமல், அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அடிபணியவில்லை. இதனிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருவது அமெரிக்காவை கவலையாக்கியுள்ளது.
இந்தியா அமெரிக்க சோளத்தை இறக்குமதி செய்ய மறுத்ததையே முன்வைத்து, அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். “1.4 பில்லியன் மக்களை கொண்ட நாடாக பெருமை பேசும் இந்தியா, ஒவ்வொருவரும் ஒரு 25.4 கிலோ சோளம் வாங்க முடியாதா? நாங்கள் எல்லாவற்றையும் வாங்குகிறோம். நம்ம சோளத்தை வாங்க மாட்டாங்கன்னு சொல்றாங்க… வரிகளைக் குறைக்கணும், நாங்கள எப்படி உங்களை நடத்துறோமோ, அப்படியே நீங்களும் எங்களை நடத்தணும்” என டிரம்பின் வார்த்தையை சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் அரசின் எச்சரிக்கை:
பல ஆண்டுகளாக செய்த தவறுகளை இந்தியா சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் கடினமான வர்த்தக சூழ்நிலையை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் டிரம்ப் நிர்வாகத்தின் புது மாடல். இதற்கெதிராக இந்தியா உறுதியுடன் நிற்பதோடு, சுயாதீனமான முடிவுகளை எடுத்துவரும் அரசாக தொடர்ந்து செயல்படுவதை உலக நாடுகள் கவனிக்கத் தொடங்கியுள்ளன.
