லடாக்கின் உம்லிங் லா கணவாயில் சமூக வலைதளப் பக்கங்களுக்காக ஆபத்தான முறையில் வீடியோ எடுக்கும் யூடியூபர்களின் செயல், இந்திய ராணுவத்திற்கு பெரும் இடையூறாக அமைவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் ஒரு பிரபல யூடியூபர், மோசமான வானிலை மற்றும் சாலைகளில் பனி உறைந்திருந்த நிலையிலும் எச்சரிக்கைகளை மீறி தனது வாகனத்தில் சென்றார். அவர் ஓட்டிய வாகனம் பனியில் சிக்கிக்கொண்டபோது, எல்லையில் பாதுகாப்பில் இருந்த ராணுவத்தினர் தங்களின் முக்கியப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரை மீட்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இந்த பொறுப்பற்ற செயல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், “சாகசம்” என்ற பெயரில் ராணுவ வீரர்களின் நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பொறுப்பற்ற செயல்களுக்கு எதிராகக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

“>

மேலும் உயரமான மற்றும் அபாயகரமான மலைப்பகுதிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பனிக்காலங்களில் இதுபோன்ற பயணங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ரத்தன் தில்லான் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பணியாற்றும் வீரர்களை, இதுபோன்ற சுயநலமான வீடியோ பதிவுகளுக்காகச் சிரமப்படுத்துவது ஒருபோதும் சாகசமாகாது என்றும், இது எல்லைப் பாதுகாப்பைத் திசைதிருப்பும் செயல் என்றும் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.