மெக்சிகோவில் உள்ள ‘வாங் துலும்’ என்ற உணவகத்தில் உணவருந்திய இந்தியப் பெண் ஒருவர், அங்கு வழங்கப்பட்ட உணவில் காரம் குறைவாக இருந்ததாகக் கூறி கூகுளில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டிருந்தார். உணவகத்தின் சூழல் நன்றாக இருந்த போதிலும், தான் கூடுதலாக மிளகாய் எண்ணெய் சேர்த்தும் உணவில் போதிய காரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பொதுவாக இது போன்ற விமர்சனங்களுக்கு உணவக உரிமையாளர்கள் மன்னிப்பு கோருவது வழக்கம், ஆனால் இந்த உணவக உரிமையாளர், “உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவை மாற்றிக்கொடுக்க நாங்கள் இங்கு இல்லை; காரம் போதவில்லை என்றால் நீங்களே ஒரு சொந்த உணவகத்தைத் தொடங்கி உங்களுக்குப் பிடித்தபடி சமைத்துக்கொள்ளுங்கள்” என மிகவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
இந்த உணவக உரிமையாளரின் இந்த அதிரடியான பதில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர், உணவக உரிமையாளரின் நேர்மையையும், தனது சமையல் பாணியை மாற்றிக்கொள்ளாத அவரது உறுதியையும் பாராட்டி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, வாடிக்கையாளர் கண்ணியமான முறையில் குறையைச் சுட்டிக்காட்டியபோது, அதற்கு இவ்வளவு கோபமாகவும் மரியாதையற்ற முறையிலும் பதிலளிப்பது ஒரு நல்ல விருந்தோம்பல் பண்பல்ல என்று விமர்சித்து வருகின்றனர். இந்த காரசாரமான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
