2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) விருப்ப மனு தாக்கல் செய்தவா்களுக்கான நேர்காணல், வரும் மாா்ச் 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது குறித்து தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்குத் தயாராகும் வகையில், கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நேர்காணல் நடத்தப்படவுள்ளது. இந்த நேர்காணல் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. விருப்ப மனு அளித்துள்ள அனைவரும் உரிய நேரத்தில் நேர்காணலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் 2026 தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களமிறங்கும் நிலையில் தற்போது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்ட விழாவின்போது பெண்களுக்கு 2500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, அனைத்து பேருந்துகளிலும், 6 இலவச சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைவாய்ந்த அறிவிப்புகளை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்து களம் காண இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தற்போது வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது