தமிழகத்தில் எந்தப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என பாஜக அரசு நினைக்கிறது. ‘மோடி பொங்கல்’ என்று அவர்கள் கூறினால், ‘ஓடிப் போங்கள்’ என்று தமிழர்கள் பதில் சொல்ல வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் கால அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு என்பது வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள மாநிலத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். ஜாக்டோ ஜியோ ஒரு வலுவான அமைப்பு என்பதாலும், அவர்களுக்குப் பல லட்சம் வாக்குகள் இருப்பதாலும் அரசு பணிந்துள்ளது. ஆனால், சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பின்னணியில் வலுவான அமைப்பு இல்லாததால், அவர்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் நேரக் கருத்துக் கணிப்புகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவை வெறும் ‘கருத்துத் திணிப்பு’ மட்டுமே. மற்ற கட்சிகள் அனைத்தும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகின்றன. நாங்கள் வாங்கும் வாக்குகள் மட்டுமே நேர்மையானவை. ஊழல், லஞ்சம், தீண்டாமை மற்றும் பெண் அடிமைத்தனம் இல்லாத ஒரு புதிய நாட்டை உருவாக்குவதே நாம் தமிழர் கட்சியின் லட்சியம்.
விஜய் குறித்து கருத்து மத்திய ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ள நிலையில், தமிழக ஆட்சியில் பங்கு என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்திருப்பது தவறில்லை. இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது; இதனை வரவேற்கிறோம்.
தனித்துப் போட்டி எப்போதும் போல நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலிலும் தனித்தே போட்டியிடும். பிப்ரவரி 21-ஆம் தேதி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறக் காலம் எடுக்கலாம், ஆனால் மக்கள் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும்.
திமுகவுக்குச் சவால் 2026 தேர்தல் எங்களுக்கு எந்தச் சவாலும் இல்லை. சமூக நீதி பேசும் திமுக, ஒரு பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி வெற்றி பெறக் காட்டுமா? குறிப்பாக, திருமாவளவனை ஒரு பொதுத் தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
