கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சொத்து தகராறு காரணமாக 70 வயது மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அவரது உறவினர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தட்டிக்கேட்க வந்த பாஜக நிர்வாகிக்கும் தர்ம அடி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவேரிப்பட்டணம் அடுத்த ஆட்டுபாலன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் உண்ணாமலை (70). இவரது கணவர் உருமுசெட்டி மறைந்த பிறகு, தனது மகன்கள் மற்றும் மருமகள்களுடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது கணவரின் அண்ணன் குடும்பத்திற்கும் இடையே பாகம் பிரிக்கப்படாத விவசாய நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் உருமுசெட்டியின் அண்ணன் மகன் குமார், அவரது மனைவி கல்பனா மற்றும் உறவினர்கள் அந்த நிலத்தை டிராக்டர் மூலம் அத்துமீறி உழவு செய்துள்ளனர். இதனை அறிந்த உண்ணாமலை, “வழக்கு நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு செய்யக்கூடாது” என தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார் மற்றும் அவரது கூட்டாளிகள், உண்ணாமலையை அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர் கதறியபடியே இருக்க, அவர் கண்முன்னேயே நிலத்தை உழுதுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த உண்ணாமலையின் உறவினரும், தர்மபுரி மாவட்ட பாஜக தொழில்நுட்ப அணி நிர்வாகியுமான அண்ணாமலை என்பவரையும் குமார் தரப்பினர் விடவில்லை. அவரையும் நிலத்தில் தள்ளி அடித்து உதைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் சென்றதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மூதாட்டியை விடுவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
காயமடைந்த உண்ணாமலை மற்றும் அண்ணாமலை ஆகியோர் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட குமார், அவரது மனைவி கல்பனா மற்றும் உறவினர் பிரபாகரன் ஆகிய மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
