திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக, ஓர் அடிமை கம்பெனியாக மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016 முதல் 2024 வரை நடந்த 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்த பழனிசாமி, ‘அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறுவது நகைப்புக்குரியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221-ல் திமுக கூட்டணி முதலிடம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சேலத்திலேயே அதிமுகவுக்குப் பலத்த சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் மறந்துவிட்டார்.

55 ஆயிரம் மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த பழனிசாமிக்கு, லேப்டாப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு டெல் (Dell), ஏசர் (Acer), ஹெச்பி (HP) போன்ற உலகத் தரமான மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன.

தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்:

Intel i3 / AMD Ryzen 3 பிராசஸர், 8 GB RAM, 256 GB SSD வசதி.

Windows 11 மற்றும் BOSS Linux இயங்குதளங்கள்.

MS Office 365 மற்றும் 6 மாத காலத்திற்கான ‘Perplexity Pro’ செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் சந்தா இலவசம்.

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் தன்னால்தான் வந்தது என பழனிசாமி கூறிக்கொள்வது, நகைச்சுவை நடிகர் வடிவேலு டீ கடையில் காசு இல்லாமல் உதார் விடுவதைப் போன்றது. மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு எனப் பல திட்டங்களைத் தான்தான் கொண்டு வந்ததாகப் பெருமை பேசும் ‘காட் காம்ப்ளக்ஸ்’ (God Complex) மனநிலையில் அவர் இருக்கிறார்.

சேலத்தில் பழனிசாமி பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், புதுக்கோட்டையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘கூட்டணி ஆட்சி மலரும்’ என்றுதான் கூறினாரே தவிர, பழனிசாமியின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. ‘கூட்டணிக்குத் தலைமை’ என்ற இடத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமி, முதல்வர் கனவு காண்பது வேடிக்கையானது. அவமானங்களைத் தாங்கிக் கொள்வதையே அவர் ஒரு கலையாக வைத்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.