அமமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் போது 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி  2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் தற்போதைய முக்கியப் பிரச்சினைகள் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை கழகப் பொதுச்செயலாளருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான தேர்தல்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (SIR) மூலம் 2026 தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைப்புத் தேர்தல்: ஏற்கனவே நடந்து முடிந்த கழக அமைப்புத் தேர்தல்களுக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கழக இலட்சியம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நோக்கத்தையும், லட்சியத்தையும் நிறைவேற்ற உறுதி ஏற்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு: காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணைகளில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளின் முயற்சியைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசை வலியுறுத்தல்.

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழகத்திற்கெனத் தனியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதார வெள்ளை அறிக்கை: திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண உதவி: வடகிழக்குப் பருவமழை மற்றும் ‘டிட்லி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

மெட்ரோ ரயில் திட்டம்: கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு: இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

திட்ட மறுபரிசீலனை: மத்திய அரசின் (VB-G RAMG) திட்டத்தை மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தல்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

சாதி, மதம் மற்றும் கடவுள்களின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகள் எக்காலத்திலும் ஈடுபடக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

இத்துடன் கழகத் தலைமை அலுவலக இடமாற்றத்திற்கும் முறைப்படி ஒப்புதல்வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பிரிவினைவாதம் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்களுடன் கூட்டணி கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறப்படுகிறது.