சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டியில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 04) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாத பொய்கள் என்று சாடினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு, பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் இந்த ஆள் சேர்க்கும் நடவடிக்கை மற்றும் எழுச்சிப் பயணம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
